தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் உள்ள பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள் ஒன்றாம் தேதி தொடங்கியது. கோபுரத்தின் உச்சியில் இன்று காலை 9:30 மணிக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. காலை 10 மணியளவில் பெரியநாயகி, பெருவுடையாருக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்து வருகின்றன. தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. தேவாரம், திருவாசகத்தை கேட்க பிரத்யேக ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு பெருவுடையார் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 10,000 பக்தர்கள் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குடமுழுக்கை காண 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.