செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்.
தேனி மக்களவைத் தொகுதியில், சிஷ்யர் ஒருவர் குருவை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஒரே அணியில் கரம் கோர்த்து பயணித்தவர்கள், வெவ்வேறு அணியில் இருந்து களமாடும் நிஜக்கதையைப் பார்க்கலாம்.
அது 1999 மக்களவைத் தேர்தல். அதிமுக வேட்பாளராக பெரியகுளத்தில் களமிறக்கப்பட்டார் டி.டி.வி. தினகரன். அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது, அப்போதைய பெரியகுளம் நகராட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம். உறுதுணையாய் இருந்தது தங்கத் தமிழ்ச்செல்வன். அப்போது அதிமுக இளைஞர் அணி செயலாளராக இருந்தார் தங்கத் தமிழ்ச்செல்வன்.
அதிமுக 45 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றியை அறுவடை செய்ய காரணமான ஓ.பி.எஸ். - தங்கத் தமிழ்ச்செல்வன் மீது அப்போதுதான் ஜெயலலிதாவின் பார்வைபட்டது.
அதன்பின் டி.டி.வி. தினகரனின் சிபாரிசில் 2001 பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது ஓ.பி.எஸ்.க்கு. அதே தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா. மாற்று வேட்பாளராக, தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பளித்தார். அந்த நொடியில் தொடங்கியதுதான் தங்கத் தமிழ்ச்செல்வனின் 'ஏறுமுகம்'.
டான்ஸி ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி ஆனது. மாற்று வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன், அமோக வெற்றியுடன் எம்எல்ஏ ஆனார். பின்னர், ஜெயலலிதாவுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வென்று முதல்வரானார் ஜெயலலிதா. தனக்காக பதவியைத் துறந்த தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கினார் ஜெயலலிதா. பிறகு 2011, 2016 தேர்தல்களில், அதே ஆண்டிபட்டியில் எம்எல்ஏ ஆனார் தங்கத் தமிழ்ச்செல்வன்.
2009 மக்களவைத் தேர்தலில் தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் தோல்வியைத் தழுவினாலும், அவர் மீதான கனிவு குறையவில்லை ஜெயலலிதாவுக்கு. ஏறுமுகத்திலேயே இருந்தார் தங்கத்தமிழ்ச்செல்வன். அந்த நிலை மாறியது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகுதான்.
அதிமுக சிதறியபோது, ஜெயலலிதாவின் 'செல்லப்பிள்ளை' டி.டி.வி. தினகரன் பக்கம் நின்றார். சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன், அமமுகவில் இணைந்தார். 'கொள்கைப் பரப்புச் செயலாளர்' என்ற முதற்கட்ட தலைவர் பதவி வழங்கினார் தினகரன். 2019 மக்களவைத் தேர்தலில், தங்கத் தமிழ்ச்செல்வனை அமமுக வேட்பாளராக தேனியில் களமிறக்கினார் தினகரன்.
ஆனால், ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் குமாரிடம் தோற்றதோடு, 3 ஆம் இடத்தையே பிடித்தார். பின்னர், டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாட்டில், அமமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார் தங்கத் தமிழ்ச்செல்வன்.
உடனடியாக மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்ததோடு, 2021 பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூரில் களமிறக்கியது திமுக. ஆனால், ஓ.பி.எஸ்.சிடம் வெற்றியைப் பறிகொடுத்தார் தங்க தமிழ்ச் செல்வன்.
வெவ்வேறு கட்சிகள் வாய்ப்பளித்தும், தொடர் தோல்விகளால் துவண்டு போன தங்க தமிழ்ச்செல்வன், இந்த தேர்தலில் வெற்றியை ருசித்துள்ளார். இந்த முறை, இவர் வீழ்த்தியது, டிடிவி தினகரன் என்ற குருநாதரை. ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியது முதல் அரவணைத்து வளர்த்த அரசியல் 'குரு'வான தினகரனை தோற்கடித்துளளார், 'சிஷ்யன்' தங்கத் தமிழ்ச்செல்வன்.
குரு - சிஷ்யன் என்ற போட்டிக் களமே தேனியை பற்றி எரிய வைத்தது. அரசியல் களத்தில் இறுதியாகக் கிடைத்த வாய்ப்பை பற்றிக் கொண்டு, பலத்தை காட்டியுள்ளார் தங்கத் தமிழ்ச்செல்வன். குருநாதர் தினகரனை வென்றது பற்றிய கேள்விக்கு, "எனக்கு போட்டி அதிமுகதான் ; தினகரன் இல்லை" என்று சாமர்த்தியமான பதிலை உதிர்த்துள்ளார், இந்த சிஷ்யர்.