மாணவர்கள் புகைப்படத்தை வைத்து அவமானப்படுத்தும் வங்கிகள் மல்லையாவுக்கு செய்ததா? வேல்முருகன்

மாணவர்கள் புகைப்படத்தை வைத்து அவமானப்படுத்தும் வங்கிகள் மல்லையாவுக்கு செய்ததா? வேல்முருகன்
மாணவர்கள் புகைப்படத்தை வைத்து அவமானப்படுத்தும் வங்கிகள் மல்லையாவுக்கு செய்ததா? வேல்முருகன்
Published on

அரக்கோணம் எஸ்.பி.ஐ வங்கியில் கல்விக் கடன், விவசாயக் கடன் செலுத்தாதவர்களின் புகைப்படம் பெரிதாக போடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரக்கோணம் எஸ்.பி.ஐ வங்கியில் கல்விக் கடன், விவசாயக்கடன் செலுத்தாதவர்களின் புகைப்படம் பெரிதாக போடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது .அதில், நீங்களும் இடம் பெற வேண்டுமா என்று வாசகம் வேறு போடப்பட்டுள்ளது. கடன் வாங்கியவர்களில் உண்மையில் வேலை கிடைக்காமல் உள்ளவர்களும் இருக்கிறார்கள். சிலர் கட்டுவதற்கான சூழ்நிலை இருந்தும், கட்டாமல் கூட இருக்கலாம். வங்கிகள் அவர்களை இனம் கண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் தங்கள் வங்கியில் கடன் வாங்கியுள்ள பெரு, சிறு நிறுவனங்களை தொடர்புக்கொண்டு, உண்மையில் வேலை இல்லாமல் கட்ட முடியாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி மேற்கொள்ளலாம்”

"இதனால், அவர்களின் வாழ்வாதாரமும் முன்னேறும். கடனையும் ஒழுங்காக அவர்களால் கட்ட முடியும். ஒரு படி மேலே போய் வங்கிகள், தொழில் நிறுவனங்களை தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தலாம். இதன் மூலம் வேலை பெறுபவரின் ஊதியத்தில் கடன் தொகையை பிடித்தம் செய்து கொள்ளலாம். அப்படியான நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, கல்விக்கடன், விவசாயக்கடன் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வங்கியின் முன்பாக வைப்பது எந்த விதத்தில் நியாயம். வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு, அக்கடனை செலுத்தாமல், மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட சில கார்பரேட் நிறுவன முதலாளிகள் வெளிநாடு தப்பிச்சென்று, அங்கு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது இதுவரை மத்திய அரசாலும், வங்கி நிர்வாகத்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை"

"ஆனால், கல்விக்கடன், விவசாயக்கடன் வாங்கியவர்களை மட்டுமே வங்கி நிர்வாகம் குறி வைத்து தாக்கி வருவது வன்மையாக கண்டித்தக்கது. ஒரு விவசாயி போதாத நேரம் காரணமாக, விவசாயம் பொய்த்துப் போய் வங்கிக் கடனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, அவர் வங்கி அதிகாரிகளால் வேட்டையாடப்படுவது வேதனைக்குரியது. மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதாகட்டும், விவசாயிகள் விவசாயக்கடன் பெறுவதாகட்டும், அவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை விதிக்கும் வங்கி நிர்வாகம், அதே கார்பரேட் நிறுவன முதலாளிகளை கண்டால், எவ்வித கேள்விகளை கேட்காமல் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி தருவது வாடிக்கையாக உள்ளது"

"வங்கியின் முன்பாக கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் புகைப்படத்தையும், விவசாயிகளின் புகைப்படத்தையும் வைத்து அவமானப்படுத்தி வரும் வங்கி நிர்வாகங்கள், மல்லையா, நிரவ் மோடியின் புகைப்படத்தை பேனராக வைத்துள்ளதா? அல்லது வங்கிக்கு வரும் கார்பரேட் நிறுவனங்களிடம் மல்லையா, நிரவ் மோடி போன்று இருக்காமல் ஒழுங்காக கடனை கட்ட வேண்டும் என உறுதியாக கூறியிருக்குமா?

அதே போன்று, அரசு நிர்வாகத்தில் பணியாற்றி, லஞ்சம் வாங்கி சிறைக்கும் சென்ற அதிகாரிகளின் புகைப்படம், பதவி, பெயர் இடம் பெறும் வகையில் ஒரு பேனராவது வைக்க அரசுகளுக்கு துணிவு இருக்கிறதா. எனவே கல்விக்கடன், விவசாயக்கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை வங்கியின் முன்பாக வைத்து இழிவுப்படுத்துவதை விட்டு விட்டு, மாணவர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கடனை வசூலிக்க தேவையான கால அவகாசம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் வேல்முருகன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com