‘ஜெயலலிதா எப்போது மறைவார்; முதலமைச்சராக எப்போது பதவியேற்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்தாரா?’ என்று மக்களவைத் துணை சபாநாயகரான தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது இலாகாக்களை பன்னீர்செல்வம் தான் கவனித்து வந்தார். கிட்டத்தட்ட முதலமைச்சர் போல் செயல்பட்டு வந்தார். அப்படியிருக்க ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டி ஆலோசனை செய்தாரா என கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் இறப்பதற்கு முன்பே அப்போலோவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறதே.. அதனை கூட்டியது யார்..? ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே, முதலமைச்சர் பன்னீர்செல்வம் தான் என அப்போலோவில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும் செய்திகள் இருக்கிறதே.. எம்எல்ஏ-க்கள் நிர்பந்திக்கப்பட்டார்களா..? அதில் உள்ள மர்மத்தை ஓ.பன்னீர்செல்வம் விளக்க வேண்டும். ஜெயலலிதா இறுதிச்சடங்குக்கு முன் இரவோடு இரவாக எம்எல்ஏ-க்ளையும், தனது சகாக்களையும் அழைத்துக் கொண்டு தற்காலிக முதலமைச்சராக கூட இல்லாமல் முழு முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றது குறித்தும் பன்னீர்செல்வம் விளக்க வேண்டும் என தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.