கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் இந்த தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில், ஆலையின் முக்கிய யூனிட்டில் சனிக்கிழமை அதிகாலையில் தீப்பற்றி, அது மளமளவென பரவியது. தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனத்துடன் பெங்களூரு, ஒசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை யிலிருந்தும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 12 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை சந்தித்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் சரயு, உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த தீ விபத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், ரசாயன கலன் இருந்த பகுதியில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசாயன கலன் வெடித்து தீ பற்றியதா அல்லது மின்கசிவு காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது சம்பந்தப்பட்ட யூனிட்டில் பணியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.