செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் இனியன். இவரது மனைவி வழக்கறிஞர் சௌமியா. இவர்கள் இருவருக்கும் சொந்த ஊர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலிங்கப்பட்டியில் அரசு மருத்துவராக பணியை மேற்கொண்ட இனியன், தனது மனைவியுடன் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பணிக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து மருத்துவர் இனியனுக்கு மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு வரவே பயிற்சி படிப்புக்குச் செல்லும் நேரம் தனது அம்மாவுடன் சேலத்தில் இருக்குமாறு மனைவி சௌமியாவிடம் கூறியுள்ளார்.
இதற்கு மனைவி சௌமியா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சௌமியா தனது தாய் வீட்டிற்கு தான் செல்வேன் எனக் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து சௌமியா, வீட்டில் உள்ள அறையில் சென்று பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இனியன் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் இரவு முழுவதும் மற்றொரு அறையில் படுத்து உறங்கி விட்டு வழக்கம்போல் காலையில் பணிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலையில் கீழ் வீட்டில் குடியிருப்பவர்கள் சௌமியாவை நீண்ட நேரம் காணாததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் இனியனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த இனியன் வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சௌமியா தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உடலை கீழே இறக்கி வைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேங்கடம் காவல்துறையினர் சௌமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இனியனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சங்கரன்கோவில் பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருவேங்கடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.