தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பரங்குன்றம் என்ற கிராமத்தில், குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு சொந்தமான இடுகாடு உள்ளது.
இந்த இடுகாட்டிற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்காக, அதன் அருகே ஒரு கொட்டகை ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொட்டகையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் மழைக்காக ஒதுங்கியதாகவும் இதை பார்த்த குறிப்பிட்ட மற்றொரு சமூகத்தை சார்ந்த ஒரு நபர், “எங்கள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட கொட்டகையில் எப்படி நீ நிற்கலாம்?” எனக்கூறி அவர்களை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவொன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களாக கூறப்படும் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த சின்னத்தம்பி மற்றும் பார்வதி ஆகிய இரண்டு பேரும் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். சாதியின் பெயரில் நடந்துள்ள இந்த கொடூர தீண்டாமை சம்பவம், தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுரண்டை காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், ‘பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை தாக்கியவரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பட்டியலினத்தவரை தாக்கிய நபராக கூறப்படும் யோசுராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.