செய்தியாளர்: சு.சுந்தர மகேஸ்
தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து விவசாய நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. இது தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது வனத் துறையினர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேக்கரை பகுதியில் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் உலாவந்த சிறுத்தை ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினரை விரட்டியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்;து தப்பித்த வனத் துறையினர், வேறு பகுதிக்குச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து. வனத் துறையினரை விரட்டிய சிறுத்தை மேக்கரை சம்போடை பகுதி சாலை அருகே உள்ள அன்பு இல்லம் என்ற பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருந்துள்ளது.
அதைப் பார்த்த இளைஞர்கள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத் துறையினரிடம் கேட்டபோது... மேக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.