தென்காசி: தோண்டத் தோண்ட கிடைக்கும் பண்டைய கால அரிய வகை பொருள்கள்

தென்காசி: தோண்டத் தோண்ட கிடைக்கும் பண்டைய கால அரிய வகை பொருள்கள்
தென்காசி: தோண்டத் தோண்ட கிடைக்கும் பண்டைய கால அரிய வகை பொருள்கள்
Published on

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி மற்றும் குழந்தைகள் பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் தங்கப்பழம். இவர், வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 1. கி.மீ. தொலைவில் உள்ள திருமலாபுரத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் பண்ணைத் தோட்டம் அமைப்பதற்கான பணியை கடந்த 15 நாள்களுக்கு முன்பு தொடங்கினார். அப்போது ஆற்றுப்படுக்கையில் காணப்படும் வழுவழுப்பான கூழாங்கற்கள் கிடைத்தன. கற்கள் நிறைய கிடைப்பதாக தொழிலாளர்கள் கூறியபோது அவர், அதை பாதை அமைக்கப் பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், மேலும் தோண்டும்போது ஆற்று மணல் தென்பட்டன. பின்னர் 4அடி ஆழம் தோண்டிய பிறகு பனை ஓடுகள் உடைந்து வெளியே வந்தன. இதைக்கண்ட தொழிலாளர்கள், தங்கப்பழத்திடம் சொல்ல அவர், அங்கு சென்று பார்த்தார். அப்போது பண்டைத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான இடமாக இருக்கும் என கருதியதால் மிக கவனமாக தோண்டச் சொன்னார். இதன் பிறகு அங்கு முதுமக்கள் தாழி பெரியது, சிறியதுமாக கிடைத்தன. முதுமக்கள் தாழியின் ஒரு பக்கத்தில் ஒரு படம் வரையப்பட்டுள்ளது. இதற்கு முன் கிடைத்த முதுமக்கள் தாழியில் இது போன்ற படம் வரையப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல் குழந்தைகள் விளையாடுவதற்கான பொருள்கள், இரும்பினாலான ஈட்டி,வில், வாள், பித்தளை செம்பு போன்ற 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. செம்பு பாத்திரம் ஒன்றும் அதில் கிடைத்துள்ளது. அதில் 6 வகையாக கோடுகள் பிரிக்கப்பட்டுள்ளது. மூடி ஒன்றில் ஏதோ குறியீடு போடப்பட்டுள்ளது. மேலும் மிக லேசான ஒடுகளால் மண்பாண்ட பொருள்கள் உள்ளன. சில இடங்களில் எலும்புகள் கிடைத்துள்ளன. அவற்றை தங்கப்பழம் சேகரித்து பத்திரமாகப் பாதுகாத்து தனி அறையில் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர், தென்காசி தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அந்த இடத்தை பார்வையிட்ட தொல்லியல் துறையைச் சேர்ந்த ஹரிகோபால கிருஷ்ணன் 'கீழடி ஆதிச்சநல்லூர் போல பண்டையத் தமிழர்கள் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் உள்ளன' என்ற அவர், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யும் வரை அந்த இடத்தை தோண்ட வேண்டாம் என தெரிவித்தார்.

இதனால் தற்போது அந்த இடத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே இதுதொடர்பான தகவல் தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இன்னும் ஒருசில தினங்களில் அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது. முதுமக்கள் தாழியும், ஓடுகளும் இருப்பதால் அது இடுகாடக இருக்கலாம். அருகில் தோண்டினால் பண்டைத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறைய கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com