தென்காசி: போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் இறந்ததாக கூறி பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்

தென்காசி: போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் இறந்ததாக கூறி பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்
தென்காசி: போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் இறந்ததாக கூறி பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்
Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீ கே புதூரில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் இறந்ததாக புகார் கூறி பொதுமக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் விகே புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் என்பவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் விசாரிக்க அழைத்து சென்று அடித்ததால்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள், வீரகேரளம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

தகவலறிந்த காவல் அதிகாரிகள் அங்கு காவலர்களை குவித்தனர். அதன் பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையின் பிறகு மக்கள் கலைந்து சென்றனர். குமரேசனின் தந்தையான நவனீதகிருஷ்ணனிடம் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “ என் மகன் கடந்த 10 ம் தேதி இரத்த வாந்தி எடுத்தான். உடனே அவனை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு உள் காயம் ஏற்பட்டதாகக் கூறினர். கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட என் மகன், உதவி ஆய்வாளர் சந்திர சேகர் மற்றும் குமார் ஆகியோரால் தாக்கப்பட்டான். அதன் பின்னரே அவனுக்கு உடல் நலம் குன்றியது. தற்போது அவன் உயிரிழந்துள்ளான். அவனை  தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் என் மகனின் பிரேத பரிசோதனை நீதிபதி ஒருவர் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com