டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது அடுத்த வாரம் விசாரணை

டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது அடுத்த வாரம் விசாரணை
டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது அடுத்த வாரம் விசாரணை
Published on

டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அடுத்த வாரம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் நிறுவனங்களுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அரசின் கொள்கை முடிவுகளை மட்டுமே அமைச்சர் என்ற முறையில் தான் எடுத்ததாகவும் இந்த புகாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இந்த சூழலை சாதகமாக்கி தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்க முயற்சிப்பதாக வேலுமணி மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் இருந்து வந்த நிலையில், தனது மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு ஆஜராகி முறையிட்டார். அந்த முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அடுத்த வாரம் வழக்கை விசாரணைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com