சூர்யா மீது நடவடிக்கை இல்லை; நீதிமன்றம் சொன்ன பத்து விஷயங்கள்..!

சூர்யா மீது நடவடிக்கை இல்லை; நீதிமன்றம் சொன்ன பத்து விஷயங்கள்..!

சூர்யா மீது நடவடிக்கை இல்லை; நீதிமன்றம் சொன்ன பத்து விஷயங்கள்..!
Published on

கொரோனா காலக்கட்டத்தில் உயிருக்கு பயந்து காணொலியில் விசாரணை நடத்தும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்கிறது என நடிகர் சூர்யா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், கூடவே சர்ச்சையும் சேர்ந்தே எழுந்தது.

சூர்யா கருத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதலாம் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏபி சாஹிக்கு கடிதம் எழுதினார். ஆனால் சூர்யா உள்நோக்கத்தோடு கூறியிருக்க மாட்டார் எனவும் அவர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடராமல் பெருந்தன்மையாக அப்படியே விட்டுவிடலாம் எனவும் 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியிருந்தனர். அதுமட்டுமின்றி பலரும் சூர்யாவின் கருத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் தாமாக முன்வந்து வழக்கை எடுத்த நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி 28 பக்க உத்தரவை பிறப்பித்தனர். நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்துவிட்டனர். அந்த உத்தரவின் முக்கியமான சாரம்சத்தை பார்ப்போம்.

1. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய முகாந்திரம் இல்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து கூறினார்.

2. விவாதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை கூறும் முன், முன்மாதிரியாக திகழ்வோர் அதனை அவமதிப்பா? அல்லது சரியான ஒன்றா? என ஆராய வேண்டும்.

3. கருத்துரிமையை வழங்கும் அரசியல் சாசன சட்டம், அவமதிப்பையும் வரையறுத்திருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

4. பொதுமுடக்கத்தில் காணொலி வாயிலாகவும், ஒரு கட்டத்தில் இயல்பாகவும் நீதிமன்றங்கள் இயங்கி, பல வழக்குகளை முடித்து வைத்துள்ளன.

5. பொது வாழ்க்கையில் இருப்போர் கருத்துகளை பேசும்போது தகவல்களை அறிந்து பேசாவிட்டால், தேவையற்ற விபரீதத்தை ஏற்படுத்தும்.

6. வார்த்தைகளை பயன்படுத்தும்போது அது தரும் பொருளையும், மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுதல் நன்று.

7. மக்கள் சார்ந்த விஷயங்களில் குறிப்பாக நீதிமன்ற செயல்பாடு, நீதிபதிகள் குறித்து விமர்சிக்கும்போது, விமர்சனம் அவமதிப்பாக மாறாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை தேவை.

8. கொரோனா போன்ற இடர்பாடு சமயத்தில், நீதிமன்றத்தை குற்றம் சொல்லும் நோக்கில் வெளிப்பட்ட வார்த்தைகள் தேவையற்ற, தவிர்த்திருக்க கூடிய ஒன்று.

9. சுயநீதிமான்கள், சமூகத்துக்கு மற்றவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் மதிக்கும் வகையில் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும்.

10. கொரோனா என்பதை நாம் ஒருவருக்கொருவர் எதிராக நிற்கும் வாய்ப்பாக பார்க்காமல், ஒருவரோடு ஒருவர் உடன்நிற்க கடவுள் அனுப்பிய வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று கூறினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com