புதுச்சேரியில் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் : தனிமனித இடைவெளியுடன் மக்கள் வழிபாடு

புதுச்சேரியில் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் : தனிமனித இடைவெளியுடன் மக்கள் வழிபாடு
புதுச்சேரியில் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் : தனிமனித இடைவெளியுடன் மக்கள் வழிபாடு
Published on

புதுச்சேரியில் 75 நாட்கள் கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் இன்று வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் 2-ஆம் கட்டம், 3-ஆம் கட்டம், 4-ஆம் கட்டம் மற்றும் தற்போது 5-ஆம் கட்டம் என பொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 31-ஆம் தேதி வரை பிறக்கப்பிக்கப்பட்டுள்ள 5-ஆம் கட்ட பொதுமுடக்கத்தில் 3 பிரிவுகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என்றும், அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் 75 நாட்களுக்குப் பின்னர் இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், மணக்குள விநாயகர் ஆலயம் மற்றும் காரைக்கால் பள்ளி வாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபட்டனர். காலை 6 மணிக்கு கோயில்கள் திறக்கப்பட்டன.

கோயில் வாசலில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கைகளை கழுவியப் பின்பு, அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் பக்தர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்த பின்னர், தனிமனித இடைவெளியுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அர்ச்சனையோ, அபிஷேக தீபாராதனையோ நடத்தப்படவில்லை. விபூதி உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படவில்லை.

இதே போன்று காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உட்பட அனைத்து மசூதிகளிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தனி மனித இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தபடி தொழுதனர். இதற்கிடையே அனைத்து வழிபாட்டு தலங்களிலும் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்பதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்காணித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com