சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது.
இந்நிலையில், சிதிலமடைந்த இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயிலை புனரமைத்து துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலினின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் புனித நீர் அடங்கிய குடங்களுடன் கோயிலை வலம் வந்தனர். பின்னர் கோயில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்ட சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ,மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, மயிலாடுதுறை எஸ்பி. நிஷா மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.