ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அபிஷேகத்திற்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்துவது பக்தர்களிடையே முகம் சுளிக்க வைப்பதால் தகவல் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டவருக்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்துவதில் என்ன பொய்யான தகவலை கொடுத்துள்ளது கோயில் நிர்வாகம்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர்.மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. வருடத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். கோயிலின் சிறப்பு இவ்வாறு இருக்க இங்கு அபிஷேகத்திற்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்துவது பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது.
இதுதொடர்பாக டெல்லி பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அபிஷேகத்திற்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்த சுற்றறிக்கை உள்ளதா? எத்தனை பிளாஸ்டிக் குடம் உள்ளது? பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் எனக்கூறிய அதிகாரி பெயர் என்ன? உள்ளிட்ட கேள்விகளை தொகுத்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த கோயில் செயல் அலுவலர் அபிஷேகத்திற்கு பிளாஸ்டிக் குடம் பயன்படுத்தவில்லை என்றும், பிளாஸ்டிக் குடம் தங்களிடம் இல்லை என்றும் பதில் அளித்திருந்தார். ஆனால் அப்பட்டமாக பொதுமக்கள் முன்னிலையில் சுவாமி அபிஷேகத்திற்கு தொடர்ச்சியாக பிளாஸ்டிக் குடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரமாயிரம் மக்களின் பெரும் நம்பிக்கையாய் விளங்கும் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்பொழுது கறைபடிந்த பிளாஸ்டிக் குடத்தை பயன்படுத்துவது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.