தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வறட்சி காரணமாக சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் 13 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. சென்னை மீனம்பாக்கம், பரங்கிப்பேட்டை, மதுரை மற்றும் புதுச்சேரியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்டும் வேலூர் மற்றும் கடலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவிலும் வெப்பம் பதிவாகி உள்ளது. திருத்தணி, திருச்சியில் 103 டிகிரியும் பாளையங்கோட்டை, நாகை, காரைக்காலில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.