இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களையும், 133 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெகதாபட்டினம், மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மீனவர்களை கைது செய்வது நிறுத்தப்படவேண்டும் என இலங்கை அரசுக்கு இந்தியா உறுதியான எச்சரிக்கை அளிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பிரதமரிடம் அளித்த மனுவில் மீனவர்களுக்கு ரூ.1,650 கோடி நிதித்தொகுப்பு அளிக்கவேண்டும் என தாம் கோரிக்கை விடுத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த நிதித்தொகுப்பை விரைவில் அளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக உச்சபட்ச அளவில் ராஜாங்க ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.