ஈரோடு அருகே தமிழ் பாட்டுப்பாடி திருமணத்திற்கு மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் நகைச்சுவையாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினர்.
இதையடுத்து இதில் கலந்து கொண்ட கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் மொழி குறித்து பேசுகையில், தமிழகத்தில் இருப்பவர்களுக்கு ஹிந்தி பாடல் தெரியும் ஆனால், இதுபோன்ற கிராமங்களில் பாடினால் பிடிக்குமா என கேள்வி எழுப்பிய அவர் திடீரென 'கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நானே' என்ற பாடலை பாடினார்.
தன்னுடைய பாலக்காடு தொகுதி, பொள்ளாச்சி அருகே உள்ளது இப்பகுதிகளில் இருப்பவர்கள் நன்றாக தமிழ் பேசுவார்கள் அங்கு மலையாள பாடல் பாடமுடியுமா என கேட்டவர் 'ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவருதான் ' என மீண்டும் பாடி அசத்தினார். மேலும் இதுவரை திருமணம் செய்யவில்லை என தெரிவித்த எம்பி, இந்த இடத்தில் நல்ல பையன் இருந்தால் சொல்லுங்கள் என நகைச்சுவையாக தெரிவித்தார்.