வரி ஏய்ப்பு புகார்: பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை... பின்னணி என்ன?

வரி ஏய்ப்பு புகார்: பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை... பின்னணி என்ன?
வரி ஏய்ப்பு புகார்: பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை... பின்னணி என்ன?
Published on

கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரன், 'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் மதப் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடையார் பகுதியில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் பாரிமுனையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.

கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி, நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் கணக்காளர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று, அதிகாரிகள் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். பல்கலைக்கழகம் முழுவதும் வருமான வரித்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய முதலீடுகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறு தலைமையிட அலுவலகம், பாரிமுனையில் கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள அலுவலகம் மற்றும் ஜெபக் கூடம், கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பால் தினகரனின் வீடான அடையாறு ஜீவரத்தினம் நகரிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அவரது குடும்பத்தினர் சிலர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. கார்ப்ரேட் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

பால் தினகரனுக்கு சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர். இவரது தந்தை டிஜிஎஸ் தினகரன் "இயேசு அழைக்கிறார்" என்ற மத பிரச்சார கூட்டத்தை நடத்தி வந்தார். அதன் பிறகு அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் டிரஸ்டிற்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய முதலீடுகள் குறித்தும் வருமானவரித் துறை சோதனை நடந்து வருகிறது.

வருமான வரிதுறை சோதனைக்கு பிறகே "இயேசு அழைக்கிறார்" குழுமம் வரி ஏய்ப்பு செய்ததா என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com