பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்ததாக 4 ஆசிரியைகள் இன்று சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள்.
முன்னதாக சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட 3 போக்சோ வழக்குகளின் அடிப்படையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவரது அறையில் இருந்து லேப்டாப் கணினி சி.பி.யூ உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், புகாரில் சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியைகளிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த சம்மனின்படி தீபா, கருணா, நீரஜா, திவ்யா ஆகிய 4 ஆசிரியைகள் எழும்பூர் சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். நிபந்தனை அடிப்படையில் இவர்கள் அனைவரும் முன்ஜாமீன் வாங்கி உள்ளதால் 4 பேரும் விசாரணை அதிகாரி முன் ஆஜாராகி கையெழுத்திட்டனர்.
இவர்களுடன் மேலும் ஒரு ஆசிரியையைக்கு வழக்கில் தொடர்பிருந்த போதிலும், பாரதி என்ற அந்த ஆசிரியை வெளிநாட்டில் தற்போது வசித்து வருவதால் முதலில் இந்த 4 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரிடமும் தற்போதைக்கு தலா ஒரு மணி நேர விசாரணை நடத்தியதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆசிரியைகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வானது இருக்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
- சுப்பிரமணியன்.