நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபாபாக்கியமேரி, தமிழ்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 48). இவரது மனைவி உச்சிமாகாளி (வயது 42). இவர்களுக்கு செல்வசூர்யா (வயது 17) என்ற மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். செல்வசூர்யா இடைகாலை பகுதியை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி செல்வசூர்யாவுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அடைச்சாணி என்ற மாணவருக்கும் இடையே கையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் கல்லால் செல்வசூர்யாவை தாக்கியதாக தெரிகிறது. அவருக்கு காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஐந்து நாட்கள் சிகிச்சை எடுக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி மாணவர் செல்லசூரியா உயிரிழந்தார். மாணவர் செல்வசூர்யா உயிரிழந்ததால், அவர் இறப்பை 302 கொலை வழக்காக பதிவு செய்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த குழுமம் முன் ஆஜர்படுத்தி பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மூன்று மாணவர்களையும் காவல்துறையினர் சேர்த்தனர்.
இந்த நிலையில் பள்ளியில் நடந்த மாணவர் மோதல் அதில் நடந்த கொலை குறித்து மேலாண்மை குழு அமைத்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபாபாக்கியமேரி, தமிழ்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.