தவறான நடவடிக்கையால் வேறுப்பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர், மீண்டும் அதேப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் தைரியநாதன். இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தது மட்டுமல்லாமல் மாணவ மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.
அதனைத்தொடர்ந்து ஆசிரியர் குறித்து, கிராம மக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் தைரியநாதன் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால் அதனைத்தொடர்ந்தும் ஆசிரியர் தொடர்ந்து அதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக தலைமை ஆசிரியரிடம் புகார் கடிதம் எழுதி சமர்ப்பித்த நிலையில், முதன்மை கல்வி அலுவலர் அவரை வேறுப் பள்ளிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் தைரியநாதன் அதிகாரியிடம் பேசி மீண்டும் வைத்தியநாதபுரம் உயர்நிலைப்பள்ளிகே வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தைரியநாதனை உடனே பணிமாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்ததோடு, அவர் மீண்டும் இந்தப்பள்ளியில் பணி அமர்த்தப்பட்டால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர்.