திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட வீர கோயிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் தம்பதியரான வெங்கட்ராமன் - சாந்தி தம்பதியரின் மகன் கிஷோர், 2ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்த நிலையில் நேற்று டைரி எழுதாமல் வந்த கிஷோரை ஆசிரியர் கொம்பால் தலையில் பலமாக அடித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த கிஷோரின் தலையைப் பார்த்து அவருடைய அம்மா சாந்தி கேட்டபோது, ஆசிரியர் அடித்து விட்டார் என்று கூறியதை அடுத்து சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு, ’’என்னை ஒன்னும் பண்ண முடியாது; நீ எங்க வேணாலும் போகலாம்’’ என்று ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது. தலையில் பலத்த அடிபட்டுள்ளதால் மாணவனை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து திருவல்லங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.