தனது ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை அமைச்சர் ஜெயகுமார் மூடிய நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நமச்சிவாய தெருவில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை 62 இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே குடிநீர் குழாய் அமைந்துள்ளது. மதுக்கடைக்கு குடிக்க வருபவர்கள் தினமும் இரவு குடித்துவிட்டு குப்பைகளை தெருவிலேயே போட்டுவிட்டு செல்வதாகவும், சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை காலை 11 மணிக்கே கடை வாசலில் காத்திருப்பதால் அந்தத் தெருவில் குடியிருக்கும் பெண்களும், குழந்தைகளும் அந்தப் பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும், பல போராட்டங்கள் நடத்தியும் அந்தக் கடையை அங்கிருந்து அகற்ற முடியவில்லை.
இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசரியரும், அமைச்சர் ஜெயகுமாருக்கு 8 வது வகுப்பு அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியருமான நாராயணசாமி அப்பகுதி மக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடையை அகற்றி தரும்படி அமைச்சர் ஜெயகுமாருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தார்.
தனது ஆசிரியரின் அன்பான வேண்டுகோளை ஏற்று கொண்ட அமைச்சர் அங்கிருந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் ஜெயகுமார் டாஸ்மாக் கடையை மூடியதற்கு அவருடைய ஆசிரியர் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களும் அமைச்சர் ஜெயகுமாரிக்கு நன்றி தெரிவித்தனர்.