தமிழகத்தில் இரவு 9 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே டாஸ்மாக் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், தற்போது டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கூட்ட நேரங்களில் டோக்கன் வழங்கப்படுவதோடு, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இணைநோய்கள் உள்ளவர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் செயல்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளைமுதல் மதியம் 12 மணிமுதல் மாலை 9 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமல்படுத்தப்பட்ட டோக்கன்முறையும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிவரை மட்டுமே டோக்கன் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.