மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் தொழிலில் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளனர். அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யவேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கிற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், ‘’மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்திருந்தது. டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதால் அரசினுடைய வழிகாட்டுதல் படியே செயல்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதேவேளையில் தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மதுவிலக்குத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம் தாக்கல்செய்த பதில் மனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தது. மேலும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் திட்டம் தற்போதுவரை ஏதும் இல்லை என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.