தஞ்சை: குழந்தைகள் காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு.. விசாரணையில் அதிர்ச்சி பின்னணி
தஞ்சாவூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான குழந்தைகள் காப்பகத்தில் மண்டை ஓடு, எலும்பு கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், அது இயற்கையான மரணம் இதுகுறித்து அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிரமத்தின் காப்பாளர் விளக்கம் அளித்தள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ஏரிப்புரக்கரையில் உள்ள அவிஸோ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் நேற்று எலும்புக்கூடு கிடைத்தது தொடர்பாக, காப்பகத்தின் நிறுவனர் சேக் அப்துல்லா நிருபர்களிடம் விளக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது திருப்பூரை சேர்ந்த ரஷீத் அலி மற்றும் காமராஜ் நகர் மஸ்ஜிதுல் அக்ஸா ஜமாத் நிர்வாகிகள் சார்பாக கடந்த 2017ம் ஆண்டு டிச்.17ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட அக்பர் என்ற சிறுவனை எங்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அக்பர் பராமரிப்பாளர்கள் உதவியின்றி சுயதேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக காப்பகத்தில் பராமரித்து வந்தோம். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு டிச.26ம் தேதி இறந்தார். அவர் மரணம் குறித்து காப்பாளர் ரஷீத் அலி சிறுவனின் ஜமாத்தார்களுக்கு முறையாக தகவல் தெரிவித்தோம். சிறுவனின் தயார் சிறுவயதிலேயே இறந்த நிலையில் தந்தையால் கைவிடப்பட்டதாலும், சிறுவனை எங்களை அடக்கம் செய்ய அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷிடம் முறையாக விசாரணையில் தெரிவித்துள்ளோம்.
இந்நிலையில், என்னுடைய இரண்டாவது மனைவி கலிமா பீவியையும் அவருடையை மகனையும் சேர்ந்து அழைத்து வந்து பாதுகாத்து வந்தேன். இப்படி உள்ள சூழலில், காப்பகத்தில் டிரைவராக பணியாற்றிய விவேகானந்தன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து காப்பகத்தில் இருந்து இரண்டு செக்குளை திருடிச் சென்று, வங்கியில் இருந்து 4.85 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இது குறித்து அவர் மீதும் டிரைவராக பணியாற்றிய விவேகானந்தன் மீதும் அதிராம்பட்டினம் போலீசில், கடந்த ஜனவரி 20ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காப்பகத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்கிற நோக்கில், கலிமாவும், விவேகானந்தனும் தவறாக நோயினால் இறந்த சிறுவனை கொலை செய்து விட்டதாக பொய்யாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.