தஞ்சை மாவட்டத்தில் போதையில் தென்னை மரத்தின் மேலேயே, தொழிலாளி ஒருவர் தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உதவியோடு அவர் கீழே இறக்கப்பட்டார்.
தஞ்சை கரந்தை சருக்கை வேலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரது பராமரிப்பில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றார்.
அப்போது சில தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து போட்டார். பின்னர் அவர், சுமார் 55 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியவர், நீண்ட நேரமாகியும் தேங்காயும் பறித்து போடவில்லை. கீழேயும் இறங்கவில்லை.
இதனால் மரத்தில் ஏறியவர், இறங்கவில்லையே என்று மேலே பார்த்தபோது தென்னை மரத்தின் உச்சியில் தேங்காய் குலைகளுக்கு சுருண்டு படுத்து தூங்கியது தெரியவந்தது. உடனே பொதுமக்கள் சத்தம் போட்டும் அவர் எழவில்லை.
பின்னர் இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரும்பு ஏணி மூலம் தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றனர். அப்போது போதை தெளிந்து லோகநாதனை, தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் கீழே இறங்கி வரச் சொன்னார்கள். ஆனால் லோகநாதன் மரத்தின் வழியாக இறங்கினார்.
பொதுமக்கள் கூடி நின்றதை பார்த்த லோகநாதன் சிரித்துக் கொண்டே கீழே இறங்கினார். இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவர் இறங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் தேங்காய் பறிக்க சென்ற போது லேசாக அசந்துவிட்டேன் என்று பதில் கூறினார்.
இதையடுத்து மேற்கு போலீசார் லோகநாதனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் எழுதி வாங்கி கொண்டு இனிமேல் இப்படி செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.