தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்

தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்
தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்
Published on

காங்கிரஸ் பேரியகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கிய தஞ்சை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்.

1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் துளசி அய்யா வாண்டையார் (93). வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். சென்னை சாலிகிராமம் வீட்டில உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.  அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

வாழ்க்கைக் குறிப்புகள்:

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் பிறந்த துளசி அய்யா வாண்டையார் ஆரம்ப காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பூண்டியில் கலை - அறிவியல் கல்லூரியை தொடங்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு துணையாக இருந்து கல்விக் காவலர் என பெயர் பெற்றவர்.

இவர் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 1991 முதல் 96 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருடன் நெருங்கிய பழக்கமுடைய இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை வகித்த இவர் 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

வாழ்வியல் நெறிகள் குறித்து இன்ப வாழ்வு என்ற நூலை எழுதியுள்ளார். மேலும் மனோரஞ்சிதம், குரல் கொடுக்கும் வானம்பாடி, பயணங்கள் தொடரும், செல்வச்சீமை ஐரோப்பா, ராக பாவம், வழிபாடு, ஆங்கிலத்தில் ஏ மெலோடியஸ் ஹார்மனி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கற்றவர்.

யோகாசனத்தில் ஆழ்ந்த புலமை உடைய துளசி அய்யா வாண்டையார் ஆன்மிகத்தின் மீதான பற்றுதலும், இயற்கையின் மீதான பேரன்பும் கொண்டவர்.

கல்லூரியிலும்கூட நூலகத்துக்கு என்றே தனி வளாகம் ஏற்படுத்தியவர். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன.

மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதும் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கே பயன்படுத்தினார். இதன் மூலம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பல பள்ளிகளுக்குப் புதிய கட்டடம் கிடைத்தது.

அமைதிக்கும் ஆளுமைக்கும் ஒரு சேர்ந்த உதாரணம் தஞ்சாவூர் துளசி அய்யா வாண்டையார். தியான மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு கீதை வகுப்புகள் நடத்தி வந்தவர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான கீதை உபதேசம் குறித்த ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகள் விநியோகம் செய்துள்ளார். காந்தியத்தைக் கடைப்பிடித்து வந்த இவர் அக்காலத்திலிருந்து கடைசி வரை கதராடை மட்டுமே அணிந்தவர். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் தற்போது தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com