வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 1,096 பேர் சிறப்பு ரயில் மூலம் நேற்று நள்ளிரவு விழுப்புரம் வந்தடைந்தனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பிற மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா , மும்பை, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த தமிழர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு அவர்களை தமிழகம் கொண்டுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்துவரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள்மூலம் நேற்று நள்ளிரவு தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
லோக்மன்னில் இருந்து திருநெல்வேலி வரை வரை இயங்கக் கூடிய லோக்மணி திலக் என்ற சிறப்பு ரயில் மூலம் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த 1,096 பேர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்தடைந்தனர். அவர்களை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.அதன் பின்னர் இவர்கள் அனைவரும் 40 பேருந்துகள் மூலம் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது