"விஜயகாந்த்தின் கோபம் குழந்தையின் கோபத்திற்குச் சமம்" - தமீமுன் அன்சாரி உருக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - "திரையுலகம் ஒரு ஆளுமையை இழந்துள்ளது" என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன்  தமீமுன் அன்சாரி
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமீமுன் அன்சாரி PT WEP
Published on

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனைப்படுகிறேன். கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத அளவில் அவரது உடல் நிலை இருந்தது தமிழ்நாட்டு மக்களிடம் கவலையை ஏற்படுத்தியிருந்தது.

திரையுலகில் தனது கடும் உழைப்பால் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது பெரும் நடிகர் என்ற உயரத்தை அடைந்தார். நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அதன் நீண்ட கால கடனை நிவர்த்தி செய்து தனது நிர்வாக ஆளுமையை வெளிப்படுத்தினார். ரசிகர் மன்றத்தினரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து அவர்களை அரசியல் களத்துக்கு தயார்ப்படுத்தியதோடு, அதன் வழியாகத் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை உருவாக்கினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன்  தமீமுன் அன்சாரி
”சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு” - நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வலிமையுடன் செயல்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசியலில் துணிச்சலோடு களமிறங்கி தனது செல்வாக்கை நிலை நிறுத்தினார். 29 சட்டமன்ற உறுப்பினர்களோடு சட்டமன்றத்தில் அவர் எதிர்க்கட்சி தலைவராகி, கம்பீரமாக பணியாற்றியதை மக்கள் ரசித்தனர்.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருந்த போது, அவர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் என்ற இடத்தில் அவருடைய நண்பர் ஜலால் அவர்களுடன் ஓய்வில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது நானும், மஜக பொருளாளர் மௌலா நாசர் உள்ளிட்டோரும் அவரை சந்தித்துப் பேசினோம். அன்று திமுக கூட்டணியில் அவரை இணைக்க நான் அவரிடம் விரிவாகப் பேசினேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன்  தமீமுன் அன்சாரி
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமீமுன் அன்சாரி

அப்போது கலைஞர் கருணாநிதி ஆவலுடன் எங்களது சந்திப்பின் முயற்சிகளைக் கேட்டறிந்தவாறு இருந்தார். ஒரு கட்டத்தில் 'பழம் கனிந்து பாலில் விழும் நிலையில் உள்ளது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் அந்த முயற்சிகள் நிறைவேறாமல் போனது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன்  தமீமுன் அன்சாரி
"நீங்கள் இல்லை என்று கூறுகிறார்கள்; அதை எனது மனம் ஏற்க மறுக்கிறது" - சமுத்திரக்கனி உருக்கம்!

அந்த உரையாடல் சமயத்தில் விஜயகாந்த் ஒரு வார்த்தை சொன்னார், 'எம்ஜிஆரைப் பார்த்தால் விழுந்துவிடுவேன்- கலைஞரிடம் பேசினால் விழுந்துவிடுவேன்' என்று அவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தினார். அந்த சந்திப்புகளுக்குப் பிறகு அவர் ஒரு மனிதநேயர் என்பதையும், இரக்கமும், உதவும் குணமும் கொண்டவர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

அவரது கோபம் என்பது ஒரு குழந்தையின் கோபத்திற்குச் சமமானது. அவர் வஞ்சகம் இல்லாதவர் என்பது அவரது வாழ்வியல் உண்மையாகும். போராட்ட குணம் கொண்ட அவர், மரணத்தையும் போராட்டத்துடன் எதிர்கொண்டிருக்கிறார். அவர் தேர்வு செய்த அரசியல் பாதையில் போக வேண்டிய தூரத்தை எட்டாமலேயே அவரது பயணம் முடிந்திருப்பது பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கட்சி அரசியலைக் கடந்து அவரது மரணம் சோக அலையை உருவாக்கியிருக்கிறது.

திரையுலகம் ஒரு ஆளுமையை இழந்திருக்கிறது. தமிழ்நாடு அரசியல் காகளம் ஒரு மனிதநேயரை இழந்திருக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவியர் திருமதி.பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com