தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தியதாக விஜயேந்திரரை கைது செய்யுமாறு மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் அவர் எழுந்து நின்று மரியாதை செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அவர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம், தமிழை அவமரியாதை செய்ததாக விஜேந்திர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திராவிட விடுதலைக்கழகம், தமிழ்ப்புலிகள், நாணல் நண்பர்கள், ஆதி்த்தமிழர்பேரவை உள்ளிட்ட பல்வேறு சமுக அமைப்புகள் புகார் மனு அளித்துள்ளன. அந்த மனுவில், “தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடும் போது, எழுந்து நிற்க வேண்டும் என்பது தமிழக அரசாணையில் உள்ளது. அதனை மீறியும் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தினையும், தமிழையும் அவமரியாதை செய்துள்ளார். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.