செய்தியாளர்: சேஷகிரி
நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான். 1947ல் சுதந்திரத்திற்கு பின் நாட்டின் முதல் பட்ஜெட்டை தமிழரான சண்முகம் செட்டியார் சமர்ப்பித்தார்.
இதன் பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் 1975ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம் பெற்று அந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1980ம் ஆண்டு பொது தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆன நிலையில் வெங்கட்ராமனை நிதியமைச்சராக நியமித்தார். தஞ்சாவூரை சேர்ந்தவரான வெங்கட்ராமன் 1980 மற்றும் 1981ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தமிழகத்தின் சிவகங்கையை சேர்ந்த சிதம்பரம் 1997ம் ஆண்டு முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் ஆனார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
பொருளாதார சீர்திருத்தங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன் வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் இந்த பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டன. இதன் பின் அவர் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை சிதம்பரம் பெற்றுள்ளார். இவர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார்.
மதுரையில் பிறந்தவரான நிர்மலா சீதாராமனுக்கு இந்தியாவின் முழு முதல் நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையும் உண்டு.