கேரள மாநிலம் பாரதப்புழா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் ரயில்வே தடங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தண்டவாளத்தின் வழியே வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தூரத்தில் ரயில் வருவது தெரிந்தும், எதிர்முனையையும் மறுமுனையையும் சரியான நேரத்தில் அடைய முடியாமல், தண்டவாளத்தில் சிக்கி, நான்கு தொழிலாளர்களும் பரிதாபமாக ரயிலில் அடிபட்டு இறந்தனர்.
விபத்துக்குள்ளான 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 4ஆவது நபரை தேடும் பணி தொடர்கிறது. ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற குழுவினர் தொடர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன், வள்ளி, ராணி மற்றும் மற்றொரு லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மீட்கப்பட்டவர்களது சடலங்கள் அங்கேயே உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
அடிமலைப்புதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதி. ஆனால், விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காத சூழலில் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி வேலைக்குச் சென்றவர்களில் 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கூறுகையில், “இங்கு எல்லோரும் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும்தான். ஆனால், விவசாயம் செய்வதில் லாபம் இல்லை. விவசாயக் கூலிகள் குடும்பத்துடன் கேரளா, திருப்பூர், கோவை என சென்றுவிடுகின்றனர். உயிரிழந்தவர்கள் கேரளா சென்று 3 மாதங்கள் ஆனது. ரயில் மோதி 4 பேர் இறந்துவிட்டதாக நேற்று செய்தி வந்தது. கேரள எம்.எல்.ஏ அம்மாநில அரசாங்கத்திடம் பேசி எதாவது நிவாரணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியுள்ளார். தமிழ்நாடு அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கொடுத்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
பெண் ஒருவர் இதுதொடர்பாக கூறுகையில், “அவர்கள் கேரளா சென்றது எங்களுக்குத் தெரியாது. உறவினரது பெண் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரைப் பார்க்கச் செல்வதாகவுமே சென்றார்கள். இவர்கள் வெளியில் வேலைக்குச் செல்வதாக எங்கள் யாரிடமும் சொல்லவில்லை. எங்களுடன்தான் வேலைக்கு வருவார்கள். முன்பே வேலைக்குச் செல்வதாக கூறியிருந்தால் எதாவது சொல்லி நிறுத்தி இருக்கலாம். மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு அங்கிருந்தபடியே கிளம்பியுள்ளனர். நேற்று மாலைதான் ரயில்மோதி அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது” என்றார்.