மண்ணை குளிர்வித்த கோடை மழை! “அடுத்த இரண்டு மூன்று வாரங்களில்..” - பிரதீப் ஜான் சொல்வதென்ன?

மண்ணை குளிர்வித்த கோடை மழை! “அடுத்த இரண்டு மூன்று வாரங்களில்..” - பிரதீப் ஜான் சொல்வதென்ன?
மண்ணை குளிர்வித்த கோடை மழை! “அடுத்த இரண்டு மூன்று வாரங்களில்..” - பிரதீப் ஜான் சொல்வதென்ன?
Published on

வானிலை ஆய்வாளர் கணிப்பின்படி, நேற்று இரவே சென்னையில் கோடை மழை பெய்துள்ளது.

இந்தியாவில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், “தமிழகத்தில் மேற்கு உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கலாம்” என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் கோடை மழை குறித்த கணிப்பும் வெளியாகியுள்ளது.

கடந்த 13-ஆம் தேதி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சேலத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவானது. 14- ஆம் தேதி, ஈரோடு மற்றும் சேலத்தில் 101 டிகிரி அளவுக்கும், நாமக்கல்லில் 100 டிகிரி அளவுக்கும் வெயில் பதிவானது. 15- ஆம் தேதி, ஈரோடு மற்றும் சேலத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது. இந்நிலையில், தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்களில் வெயில் அதிகரித்துக் காணப்படும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் நிலவும் வெப்ப நிலை குறித்து நம்மிடையே நேற்று பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “இந்த ஆண்டு நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்ப நிலை சராசரியை ஒட்டியே உள்ளது. குறிப்பாக, சில நாட்களாக மேற்கு உள் மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் கிழக்கிலிருந்து காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

அந்த மாவட்டங்களில் இந்த காற்று, உள்ளே போகப்போக தரைக் காற்றாக மாறிவிடும். ஆகையால், மேற்குப் பகுதியில் தரைக்காற்று பிட் ஆகும்போது அங்குள்ள வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். அதேநேரத்தில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரதீப் ஜான் கோடை மழை பற்றி கூறியிருந்தது, சென்னையில் நேற்று இரவுகூட நடந்திருந்தது. அந்தவகையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு கோடை மழை பெய்திருந்தது. அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது. வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது. அதன்படி குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com