மூன்றாவது நாளாக திரையரங்குகளில் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களில் 35 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
30 சதவிகித கேளிக்கை வரி செலுத்திவரும் நிலையில், மேலும் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திரையரங்க உரிமையாளர்களின் போராட்டத்தின் காரணமாக, ஏற்கனவே வெளியான படங்களைத் திரையிடுவதிலும், வெளியாகவுள்ள படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் தயாரித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரூ.35 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக, திரைத்துறையினர் தெரிவித்தனர். ஒவ்வொரு திரையரங்கிலும் ஆபரேட்டர்கள், நுழைவுச்சீட்டு கொடுப்போர், துப்பரவுத் தொழிலாளர்கள், உணவுப் பொருள் விற்பனையாளர், வாகன நிறுத்துமிட ஊழியர்கள் என, தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளிதழ்களில் புதிய படங்கள் குறித்த விளம்பரங்கள் எதுவும் இன்று வெளியாகவில்லை. வழக்கமாக திரையில் ஒடிக்கொண்டிருக்கும் படங்கள் மற்றும் திரைக்கு புதியதாக வரும் படங்கள் பற்றிய விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாவது வழக்கம். வரிவிதிப்புகளுக்கு எதிராக 3வது நாளாக தமிழகத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் படங்கள் குறித்த விளம்பரங்களும் வெளியாகவில்லை.