c
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், ‘தமிழகத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள், பெங்களூருவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட 1100 மாதிரிகளில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மூவரில், சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஒருவர் - காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் – மதுரையை சேர்ந்த ஒருவர் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர்.
இதில் மதுரையில் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர், ஏற்கனவே குணமடைந்து வீடுதிரும்பிவிட்ட நிலையில், தற்போது இருவருக்கு மட்டுமே சிகிச்சை தரப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கு அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற வைரஸ் பரிசோதனைகளை கண்டறியக்கூடிய பரிசோதனை மையங்கள் நாட்டிலேயே மொத்தம் 14 இடங்களில் மட்டும் இருப்பதாகவும், தமிழகத்தை பொருத்தவரை பெங்களூருக்கு அனுப்பி அதன் பின்னர் அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சென்னையிலேயே டெல்டா பிளஸ் உள்ளிட்ட வைரஸ் மாதிரிகளை கண்டறியக் கூடிய அதிநவீன பரிசோதனை மையங்கள் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அவை கிடைக்கிற பட்சத்தில் விரைவில் சென்னையில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
- ஸ்டாலின்