தமிழக ஆளுநர் மாளிகைக்கான செலவு கடந்த 6 மாதங்களில் 80 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் 2016ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி முதல் 2017 அக்டோபர் 6ம் தேதி வரை பொறுப்பில் இருந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த அவர் சென்னையில் உள்ள ராஜ்பவனில் குறைவான நாட்களே இருந்தார். வித்யாசாகர் ராவுக்கு பிறகு தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பின்னர் ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான மொத்த செலவு அதிரடியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வித்யாசாகர் ராவ் ஆளுநராக இருந்த ஏப்ரல் 2017 முதல் செப்டம்பர் 2017 வரையிலான 6 மாதங்களில் ஆளுநர் மாளிகையின் செலவு 1.43 கோடி ரூபாய். போக்குவரத்திற்கு மட்டும் 80.5 லட்சம் ரூபாய் செலவானது. மின் கட்டணம் 55.1 லட்சம் ரூபாய். அதற்கு அடுத்தப்படியாக கேட்டரிங் செலவு 44.2 லட்சம் ரூபாய்.
ஆனால், பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்த அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான அடுத்த 6 மாதங்களில் ஆளுநர் மாளிகை செலவு 30.3 லட்சம் ரூபாய் மட்டுமே. எல்லா செலவுகளையும் ஆளுநர் மாளிகை அதிரடியாகக் குறைத்துள்ளது. போக்குவரத்து செலவு 4.7 லட்சம் ரூபாய் மட்டுமே. அதேபோல், மின்கட்டணம் 10.9 லட்சம் ரூபாய். கேட்டரிங் செலவும் 9.2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் முந்தையை 6 மாதங்களை காட்டிலும் 80 சதவீதம் செலவு குறைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், 2017 - செப்டம்பர், 2017 (வித்யாசாகர் ராவ்)
அக்டோபர் 2017 - மார்ச் 2018 (பன்வாரிலால் புரோஹித்)
இதுகுறித்து ஆளுநரின் கூடுதல் முதன்மை செயலாளர் ராஜகோபால் கூறுகையில், “ஆளுநர் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் எக்னாமிக்கல் வகுப்பில் செல்கிறார்கள். ஆளுநரும் கூட. மின்சார பயன்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்குள் செல்லும் போது ஆளுநர் ரயில் பயணமே மேற்கொள்கிறார். ஆளுநர் உடன் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆளுநர்களுக்கு இருந்தவர்களை விட மிகவும் குறைவு இது” என்றார்.