காங்கிரஸ் பேரியகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாவும், பூண்டி கல்லூரி தாளாளருமாக விளங்கிய தஞ்சை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் துளசி வாண்டையார். 93 வயதாகும் அவர், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்டா மாவட்ட மக்களால் ‘கல்விக் கண் திறந்த வள்ளல்’ எனக் கொண்டாடப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து ஆற்றொணாத் துயரம் கொண்டேன். இவர்களது பாரம்பரியத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மூலம் டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்கள் கல்வியறிவு பெற்றனர். துளசி அய்யா வாண்டையார் தாளாளராக இருந்து வரும் பூண்டி புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி மூலம் ஆண்டுக்கு ஆயிரம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கி வருகின்றனர். 60 ஆண்டுகளைக் கடந்து விட்ட இவர்களது கல்விப் பணியால், நெற்களஞ்சியமான தஞ்சைத் தரணி, அறிவுக் களஞ்சியமாகவும் வளர்ந்து செழித்துள்ளது என்றால் மிகையாகாது.
துளசி அய்யா வாண்டையார் அவர்கள் கடந்த 1991-1996ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் மறுத்துவிட்டு, தன் சொந்தச் செலவிலேயே டெல்லிக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த தகைமையாளர் ஆவார். இறுதிவரை அண்ணல் காந்தியடிகளின் ஆத்மார்த்த சீடராக விளங்கி வந்த அய்யா வாண்டையார் அவர்களது மறைவு டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பேரிழப்பாகும். துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், டெல்டா மாவட்டத்து மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி வள்ளலாகவும், டெல்டா மக்களின் பேரன்பை பெற்றவருமாக திகழ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை முல்வர் ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,” தஞ்சை மாவட்டத்தில் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கச் செய்தவரும், அரசியல், விவசாயம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்தவருமான அய்யா திரு.பூண்டி துளசி வாண்டையார் அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை ஐயா துளசி வாண்டையார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும்அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன், “முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். பழம்பெருமையும்,பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் ‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம் கொண்டவர். ‘ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய திரு.துளசி அய்யா அவர்கள், அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம்,கல்வி,சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வியைக் கண் என்று கருதியவர் துளசி ஐயா வாண்டையார். தான் பெற்ற கல்வி செல்வத்தைப் பிறருக்கும் பகிர்வதற்காகத் தன் செல்வத்தை செலவழித்தவர். முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பலருக்கு எழுத்தறிவித்த பெருமகன் இன்று கண் துஞ்சிவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களைச் சமர்ப்பிக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுபெரும் காங்கிரஸ் தலைவர் திரு கி.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும், தஞ்சை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற மிகச்சிறந்த அறிஞர், ஆன்மீகவாதி. பழகுவதில் இனிய பண்பாளர். காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சியில் பெரும்துணையாக இருந்த திரு கி.துளசி அய்யா வாண்டையார் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் திரு கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.