சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர்: 'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!
எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்: செந்தமிழை, செழுந்தமிழாய் செழிக்கச் செய்யும் கரிசல் காட்டு மண்ணில், இடைசெவலில் மலர்ந்த, ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர் கி. இராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்: முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா அவர்களின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.