கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !

கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !
கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !
Published on

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதிய தலைமுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் ஒரே நாளில் 40 லட்சம் ரூபாய் அளவிலான நிவாரணப் பொருள்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் புதியதலைமுறையின் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடும் துயரத்தில் தவித்துவரும் கேரள மக்களுக்காக தமிழக மக்கள் நிதி உதவியும், நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். உணவு, மருந்து, துணிகள் என தங்களால் இயன்றவற்றை வழங்குகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 5 மையங்களிலும் ஒரே நாளில் 40 லட்சம் ரூபாய் அளவிலான நிவாரணப் பொருள்களை புதியதலைமுறை நேயர்கள் வழங்கியுள்ளனர். அதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிய தலைமுறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்கு வரும் ஏராளமானோர், பல்வேறு வகையான நிவாரண பொருள்களை அளித்து வருகின்றனர். 

அரிசி, பால் பவுடர், நாப்கின், பாய், தலையணை, போர்வை, மருந்து உள்ளிட்ட பொருட்களை மக்கள் வழங்குகின்றனர். பள்ளிக் குழந்தைகள் இருவர் தங்களிடம் இருந்த பணம் தலா ஆயிரம் ரூபாயை அளித்து நெகிழச் செய்தனர். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார். விடுமுறையில் மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் கிளம்பிய சிறுவர்கள் இருவர், திடீரென தந்தையை அழைத்துச் சென்று பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டுவந்து அளித்த நிகழ்வும் நடந்தது. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை சிறிய வேனில் கொண்டுவந்து அளித்தனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு கேரள மக்கள் உதவியதால் அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என்று நெகிழ்ச்சியுடன் கூறினர். குடும்பமாகவும், குழுக்களாகவும், தனி நபராகவும் ஏராளமானோர் வந்து நிவாரணப் பொருட்களையும், பணத்தையும் அளித்துச் சென்றனர். அதைப்போலவே, சிறு வணிகர்கள், சிறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தாமாக முன்வந்து, பல்வேறு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சகோதர உணர்வுடன் பொதுமக்கள் நிவாரண பொருள்கள், நிதியுதவி அளித்து வருவது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கேரளா வெள்ள சேதத்தை தொலைக்காட்சியில் பார்த்த புதுச்சேரி வில்லியனூரில் உள்ள நரிக்குறவர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்ய முன் வந்தனர். அதை புதியதலைமுறை தொலைக்காட்சி மூலம் வழங்க முடிவு செய்த அவர்கள் நேற்று அவர்கள் விற்பனை செய்த ஊசிமணி, பாசிமணி பொருட்களில் கிடைத்த ஒரு நாள் வருமானம் ரூ.5000 ரூபாயை புதியதலைமுறை அறக்கட்டளைக்கு வரைவோளையாக எடுத்துக் கொடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதை பார்த்த பலரும் தங்களால் முடிந்தவற்றை கொடுக்க முடிவு செய்து தொடர்ந்து உதவி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com