தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், 6ஆம் தேதி பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 30ஆம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வருகிற 5ஆம் தேதி சென்னை வரக்கூடும் என்றும், பின்னர் தமிழக ஆளுநராக வரும் 6ஆம் தேதி பதவி ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 11ஆம் தேதி முதல் சில நாட்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் எனவும், அங்கு 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் பாங்கேற்பார் என்றும் தெரிகிறது. அத்துடன் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.