”ED ரெய்டு.. திமுக மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல்”- மம்தா to கெஜ்ரிவால்.. குவியும் கண்டனங்கள்!

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செந்தில்பாலாஜி மற்றும் பிற கட்சித் தலைவர்கள்
செந்தில்பாலாஜி மற்றும் பிற கட்சித் தலைவர்கள்twitter
Published on

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடைய அலுவலகத்தில் இன்று காலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் 3 மணிநேரம் சோதனை செய்தனர். இந்தச் சோதனைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:

”தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது; விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என மோடி அரசு நினைக்கிறது” என்று கூறியுள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

”திமுக மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கலை கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜகவின் அவநம்பிக்கையான செயல்கள் ஆகும்” என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:

”எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. அமலாக்கத் துறையினரின் சோதனைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் பழிவாங்கல் மூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாஜக கேடு விளைவிக்கிறது” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்:

”தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது கண்டனத்திற்குரியது. செந்தில்பாலாஜி மீதான சோதனை மூலம் தென் மாநிலங்களைப் பழிவாங்க தொடங்கியுள்ளது அமலாக்கத் துறை” என்று சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com