கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராடினர். போராட்டம் ஒரு கட்டத்தில் சோக நிகழ்வில் முடிந்தது. இந்நிலையில் தற்போது உயர் அழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை எனக் கூறி தொடர்ச்சியாக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர்.
13 மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக தமிழக அரசு கடந்த வாரம் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது. காரணம் இந்த திட்டத்தை நிறுத்திவைக்க கோரிக்கை விடுத்த விவாயிகள், உயர்நிலை மின்கோபுரங்களுக்கு பதிலாக பூமிக்கு அடியில் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். இதன்மூலம் விவசாய நிலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு வராது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து மின்துறை நிபுணர்கள் கூறும்போது, நிலத்தடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமானது அல்ல. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 800 கிலோ வாட் மின்சாரத்தை சுமந்து செல்லும் நிலத்தடிகேபிள் வசதிகள் இல்லை என ஒரே வரியில் முடிக்கின்றனர். மொத்தமாக 2,40,000 கோடி திட்ட மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 970 மின்கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
விவசாயிகள் எதிர்ப்பது ஏன்..?
மின்கோபுரங்கள் அமைக்கப்பட்ட பின்பு, அதன் அருகே உள்ள நிலங்களில் நில உரிமையாளர்கள் எந்தவொரு விவசாய வேலைகளையும் செய்ய முடியாது என்பது விவசாயிகளின் மிக்பெரிய கவலையாக உள்ளது.
மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் நிலத்தின் மதிப்பு குறைந்துபோகும் என்பது விவசாயிகள் மற்றொரு கவலை. தற்போது இருக்கும் நிலத்தின் மதிப்பில் பாதி கூட கோபுரம் அமைக்கப்பட்ட பின்பு இருக்காது என விவாயிகள் கருதுகின்றனர். இதனால் யாரும் நிலங்களை வாங்க முன் வர மாட்டார்கள் என்றும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
தென்னை மரங்களோ அல்லது வேறு ஏதேனும் மரங்களா மின்கோபுரத்திற்கு கீழே வளராது என விவசாயிகள் கருது கருதுகின்றனர். அத்துடன் தற்போது இருக்கும் வருமானம் பாதியளவில் கூட கோபுர அமைப்பிற்கு பின்னர் இருக்காது என விவாசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இத்திட்டம் அமல்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது மத்திய எரிசக்தித் துறை. அதில், மாவட்ட ஆட்சியர்கள், வழிகாட்டி மதிப்பின்படி மின் கோபுரங்கள் அமைக்கும் இடத்துக்கு 85%, மின்கம்பி வழித்தட நிலங்களுக்கு 15% வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது குறைவானது என்றாலும், இந்த வழிகாட்டல்களையும்கூட தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோபுரம் அமைக்கப்பட்டால் நிலத்திற்கு மதிப்பே இருக்காது என தெரிவிக்கும் விவசாயிகள், எத்தகயை இழப்பீடு கொடுத்தாலும் இது தகாது என கூறுகின்றனர். அத்துடன் தங்களின் நிலங்களில் கோபுரங்களை அமைக்க, அரசு வாடகை செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.