தமிழ்நாட்டில் அனைத்து மணல் குவாரிகளிலும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பட்டது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும், தமிழ்நாடு பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம். திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையின்போது, ஆட்சியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தற்போது தேர்தல் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர்களால் நேரில் ஆஜராக முடியாது என்று தெரிவித்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆட்சியர்கள் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும், விசாரணை அமைப்பிடம் அவர்கள் நேரில் ஆஜராகி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதிகள் கூறினர்.
தமிழ்நாட்டில் தேர்தல் தேதியை கேட்டறிந்த நீதிபதிகள், ஏப்ரல் 25ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.