சமூகநீதி குறித்த எங்கள் பார்வைக்கு தமிழகமே உந்துசக்தி என்று பீகார் எதிர்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, 'உங்களில் ஒருவன்' புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பீகார் எதிர்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ், '' தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது. பல்வேறு வழிகளில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு முன்னோடி தலைவர்களாக திகழ்கின்றனர். சமத்துவம், சமூகநீதி, நீதி, ஆகியவற்றை தமிழ்நாட்டிலிருந்து கற்றுகொள்ளவேண்டியிருக்கிறது. சமூகநீதி குறித்த எங்கள் பார்வைக்கு தமிழகமே உந்துசக்தி. முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பல விஷயங்களை கற்க வேண்டும். சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர மக்களை புரிந்துக் கொள்ளவேண்டும்.
தமிழகத்தின் சமூகநீதி இயக்கங்களால் என் தந்தை லாலு பிரசாத் யாதவ் ஈர்க்கப்பட்டார். பல வரலாற்று நிகழ்வுகளை முதல்வரின் சுயசரிதையிலிருந்து அறிந்துக் கொண்டேன். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். தலைவர்களின் சுயசரிதையை பதிவு செய்வது, வரலாற்றில் முக்கியமானது. இந்த புத்தகம் சமூகம் குறித்து பரவலான பார்வையை வெளிப்படுத்துகிறது.
அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களை புரிந்துகொள்வது சவால்நிறைந்தது. சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர, புத்தியசாலித்தனம் மட்டும் போதாது, மக்களை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் இந்த சமூகத்தையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் புரிந்துகொண்டுள்ள ஒரு தலைவர். இந்த புத்தகம் ஸ்டாலினின் பரந்து பட்ட பார்வையையும், அரசியலையையும் விவரிக்கிறது. இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.