இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாய்மார்களை கைவிடக்கூடாது, மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கின்றன என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் சர்வதேச அன்னையர் தின விழா நிகழ்ச்சி ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவியும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செஸ் வீரர் பிரக்னானந்தா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ஈரோடு மகேஷ், பாரா ஒலிம்பிக் வீரர் பொன்ராஜ், சமூக செயற்பாட்டாளர்கள் சுஜித்குமார், சசிகுமார் உள்ளிட்டோரின் தாய்மார்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "அன்னையர்கள் வருகையால் ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற ஒரு இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கபட்ட இடமாக மாறியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும், இந்த நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை, மொழி, கலாச்சாரம் கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே. மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கின்றன. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனிடம் உள்ள அன்பு குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகின்றன" என்றார்.
மேலும், "நான் பராசக்தி கடவுளை வணங்கும் ஒருவர். நான் கண்களை மூடும் நேரத்தில் பராசக்தி உருவத்தில் என் தாயைப் பார்க்கிறேன். வளர்ந்து வரும் உலகில் தற்போது உள்ள இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். தாயின் அன்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற அழகான பாடலை இளையராஜா இசை அமைத்து உள்ளார்; அந்தப் பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை" என்றார்.
இறுதியாக, "நாம் எங்கு இருந்தாலும் நம் அம்மாவை கைவிடக்கூடாது. தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். தங்களுடைய தாய் தந்தையை தனியாக விட்டு செல்கின்றனர். ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை கைவிடுங்கின்றனர். ஒருபோதும் தங்களுடைய தாயை யாரும் கைவிடக்கூடாது" என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.