தமிழ்நாட்டில் புழுங்கலரிசி நுகர்வு அதிகம் உள்ளதால், தமிழக அரசிடம் கையிருப்பில் உள்ள பச்சரிசியில் ஒரு பகுதிக்கு பதிலாக புழுங்கலரிசி ஒதுக்கீடு செய்யும்படி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணைச் செயலாளரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அரிசி பயன்பாட்டில் புழுங்கலரிசி 80 சதவீதமாகவும் பச்சரிசி 20 சதவீதமாகவும் உள்ளது. இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) தமிழ்நாடு மாநிலத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி புழுங்கலரிசியாகவும் பச்சரிசியாகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலைகள், தனியார் அரிசி ஆலைகள் மூலமாக அரவை செய்யப்பட்டு அரசின் இதர திட்டங்களுக்கு தேவையான இருப்பாக வைக்கப்படுகிறது.
இருப்பில் வைக்கப்படும் அரிசி, அரசின் பலவிதமான பொது விநியோக பயன்பாட்டிற்காக மத்திய தொகுப்பிற்கு ஈடு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான பச்சரிசி தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நுகரப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலத்தின் அரிசி நுகர்வில் 80 சதவீதம் புழுங்கலரிசி உள்ளதை கருத்தில்கொண்டு, உபயோகப் படுத்தப்படாத பச்சரிசியை இந்திய உணவுக்கழக கிடங்கிற்கு திரும்ப செலுத்திட அனுமதி கோரியும், அதற்கு ஈடாக புழுங்கலரிசியை ஒதுக்கீடு செய்யவும், அவ்வாறு ஒதுக்கீடு பெறப்பட்ட அரிசியினை தேவையானப் பகுதிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கிட அனுமதியும் கோரி ஏற்கெனவே தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மத்திய உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இதன் தொடர் நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசின் டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட இணைச்செயலாளர் சுபோத்குமார் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து, தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படாத பச்சரிசிக்கு மாற்றாக புழுங்கலரிசி வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
இது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட துறை இணைச் செயலாளர் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இதுதொடர்பாக விரைவாக முடிவு எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியதாக விஜயன் தெரிவித்தார்.
- கணபதி சுப்ரமணியம்