“எனது கணவர் இறப்புக்கு நீதி வேண்டும்”- நாமக்கல் சிறையில் இறந்த மாற்றுத்திறனாளியின் மனைவி

“எனது கணவர் இறப்புக்கு நீதி வேண்டும்”- நாமக்கல் சிறையில் இறந்த மாற்றுத்திறனாளியின் மனைவி
“எனது கணவர் இறப்புக்கு நீதி வேண்டும்”- நாமக்கல் சிறையில் இறந்த மாற்றுத்திறனாளியின் மனைவி
Published on

நாமக்கல் சிறையில் இருந்த மாற்றுத்திறனாளியொருவர் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், ‘காவல் நிலையத்தில் வைத்து மூன்று நாட்கள் போலீசார் தாக்கியதாலேயே எனது கணவர் இறந்துவிட்டார்’ எனக்கூறி தனது கணவர் இறப்புக்கு தமிழக அரசு உரிய தீர்வு கொடுக்க வேண்டும் என்று இறந்த பிரபாகரனின் மனைவி கருப்பூரை சேர்ந்த ஹம்சலா தெரிவித்துள்ளார். முன்னதாக பிரபாகரனை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பூர் பேரூராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு ஹம்சலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மாற்றுத்திறனாளியான இவர் மீதும், இவரது மனைவி மீதும் திருட்டு வழக்கு இருப்பதாகக் கூறி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார், கடந்த 11-ம் தேதி, கருப்பூரில் இருந்து, கணவன் மனைவி இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரது மனைவியை சேலம் பெண்கள் சிறையிலும், பிரபாகரனை நாமக்கல் மாவட்ட கிளைச்சிறையிலும் அடைத்தனர்.

இதனிடையே 12-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட பிரபாகரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதை கண்டித்து 13-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், இறந்தவரின் மனைவி ஹம்சலா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். போலீசார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரபாகரனின் சகோதரர் சக்திவேல், சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதியப்பட்டது. இந்தநிலையில், சேந்தமங்கலம் எஸ்.ஐ சந்திரன், புதுச்சத்திரம் எஸ்.ஐ பூங்கொடி, திருச்செங்கோடு தாலுகா முதல்நிலை காவலர் குழந்தைவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து செய்து ஐ.ஜி பொறுப்பு வகிக்கும் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல் ஹாதா உத்தரவிட்டார். இந்தநிலையில், தனது கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபாகரனின் மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “கடந்த சனிக்கிழமையன்று ஒரு பெண் போலீஸ் உட்பட நான்கு போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் என்னையும், எனது கணவரையும் வண்டியில் ஏறுமாறு கூறினர். எனது கணவர் மாற்றுத்திறனாளி என்பதால் நடக்க முடியாது என்றோம். பின்னர் கால் டாக்ஸியை வரவழைத்து, எங்களை அழைத்துச் சென்றனர். எங்களிடம் சேந்தமங்கலம் காவல் நிலைய குடியிருப்பில் வைத்து எங்களிடம் ‘எவ்வளவு நகையை திருடினீர்கள், நீங்கள் இந்த திருட்டை ஒப்புகொள்ள வேண்டும்’ என்று கூறி மிரட்டினர். பின்னர் எனது கணவரையும், என்னையும் மூன்று நாட்களாக வைத்து அடித்து உதைத்தனர். அதற்குப் பிறகே சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் எங்களை ஆஜர்படுத்தி, என்னை சேலம் சிறையிலும், அவரை நாமக்கல் சிறையிலும் அடைத்தனர். செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்த நிலையில், புதன்கிழமை எனது கணவர் இறந்துவிட்டார். எனது கணவர் இறப்புக்கு தமிழக அரசு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com