மத்திய நீர்வளக்குழுமம் ஒப்புதல் அளித்த மாதவாரியான அட்டவணையை பின்பற்றியே முல்லை பெரியாறு அணையில் நீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு 500 அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியே தமிழக நீர்வளத்துறை அணையை கவனமாக இயக்கிவருவதாகக் கூறியுள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணை திறப்பு தொடர்பான தவறான தகவல்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உத்தரவிட்டது. தற்போது, தமிழ்நாட்டிற்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை நிலையான வழிகாட்டுதல்படி முறையாக இயக்கப்படுவதாக துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.